நகைகளை கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது

பெரம்பலூரில் நகைக்கடை அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-01 19:17 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் சர்ச் ரோட்டை சேர்ந்த நகைக்கடை அதிபர் கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது வீட்டில் இருந்த 103 பவுன் நகைகள், 9 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை முகமூடி அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் கடந்த மாதம் 26-ந் தேதி இரவு கொள்ளையடித்து சென்றனர். 
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கடந்த 29-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே ஆலம்பாடி செல்லும் சாலையில் 2-வது வார்டு இந்திரா நகரில் அனாதையாக நின்ற கருப்பண்ணனின் காரை கைப்பற்றினர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரில், ஒருவரை பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பினர். பிடிபட்டரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் இளங்கோ நகரை சேர்ந்த செந்தில்குமார்(வயது 36) என்பதும், நகைக்கடை அதிபர் கருப்பண்ணன் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
பரபரப்பு வாக்குமூலம்
பின்னர் அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
செந்தில்குமார் மீது பெரம்பலூர் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆகஸ்டு மாதம் கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த 23-ந்தேதி தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அவரது தாய் ராஜேஸ்வரிக்கு உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் திண்டாடி உள்ளார்.
பின்னர் தனது நண்பரான பெரம்பலூர் சங்குப்பேட்டை கம்பன் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் சிறையில் பழக்கமான திருச்சியை சேர்ந்த ஆனந்தன் ஆகிய 3 பேரும் நகைக்கடை அதிபர் கருப்பண்ணன் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து கொண்டு வீட்டின் பின்புறம் நிறுத்தியிருந்த கருப்பண்ணின் காரை எடுத்து கொண்டு 3 பேரும் ஆலம்பாடி சாலை வழியாக செந்தில்குமாரின் சொந்த ஊர் அரும்பாவூருக்கு தப்பி சென்றுள்ளனர்.
நகைகள் பங்கு பிரிப்பு
பின்னர் கொள்ளையடித்த வெள்ளி பொருட்களை மட்டும் செந்தில்குமாரின் தாய் ராஜேஸ்வரி, 2-வது மனைவி கவிமஞ்சுவிடம் கொடுத்து விட்டு, செந்தில்குமார், ராஜ்குமாரும் கத்தியை அங்கேயே மறைத்து வைத்து விட்டு, இனி காரில் சென்றால் போலீசாரிடம் மாட்டி கொள்வோம் என்று காரை பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி விட்டு, கொள்ளையடித்த தங்க நகைகள், பணத்தை எடுத்து கொண்டு ஒரு வாகனம் மூலம் துறையூர் வழியாக திருச்சியில் உள்ள ஆனந்தன் வீட்டிற்கு தப்பி சென்றனர். அங்கு கடந்த 27-ந் தேதி கொள்ளையடித்த தங்க நகைகளை 3 பேரும் பங்கு பிரித்துள்ளனர்.
பின்னர் செந்தில்குமார் தனக்கு கிடைத்த தங்க நகைகளை சென்னையில் விற்று பணமாக்குவதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சியில் இருந்து ராஜ்குமார், ஆனந்தன் ஆகியோருடன் பஸ்சில் ஏறி புறப்பட்டார். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ் நின்ற போது, சிறுநீர் கழிக்க 3 பேரும் இறங்கிய நிலையில் செந்தில்குமார் பிடிபட்டார்.  
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் செந்தில்குமார் அளித்த தகவலின்பேரில், ஆனந்தன்(46), கொள்ளையடித்த பொருட்களை வைத்திருந்ததாக செந்தில்குமாரின் தாய் ராஜேஸ்வரி(58), மனைவி கவிமஞ்சு(34) ஆகியோரும் கைது செய்யப்பட்டு 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களிடம் இருந்து 16 பவுன் நகைகள், 2 கிலோ 400 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்