போலி ஆவணங்களை தயாரித்து ரூ.20 லட்சம் மோசடி; தலைமை காவலர் உள்பட 5 பேர் மீது வழக்கு
குளித்தலையில் போலி ஆவணங்களை தயாரித்து ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக தலைமை காவலர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குளித்தலை,
வீட்டு உபயோக பொருட்கள்
திருச்சி மாவட்டம் தண்டலைபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுகிதா (வயது 40). இவருக்கு கடந்த 2001-ம் ஆண்டு செல்வம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவில் உள்ள திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான கடையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்த முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்து வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.
அப்போது திருச்சி மாவட்டம் முசிறி பாரிவள்ளல் நகர் பகுதியை சேர்ந்த காந்திசெல்வம் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
2-வது திருமணம்
காந்திசெல்வம் தற்போது கரூரில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பழனியில் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதை அறிந்த சுகிதாவின் கணவர் செல்வம் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். பின்னர் சுகிதாவும் காந்திசெல்வமும் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கடை திறக்காததால் மாத வாடகையை காந்திசெல்வம் மூலம் கணேசனுக்கு சுகிதா கொடுத்து வந்துள்ளார்.
மோசடி
சம்பவத்தன்று சுகிதா அவரது கடைக்கு சென்றபோது அங்கிருந்த காந்திசெல்வம், அவரது மனைவி சுபிதா (37), திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த லோகநாதன், கோவிந்தராஜ் ஆகியோர் கடைக்குள் சென்ற சுகிதாவை திட்டி அடித்து ஆடையை பிடித்து இழுத்து அவரது பெயரில் முறைப்படி ஜி.எஸ்.டி. எண்ணுடன் உள்ள கடையை அக்கடையின் உரிமையாளர் கணேசன் என்பவருடன் சேர்ந்து போலியாக ஆவணங்களை தயார் செய்து அவரது கையெழுத்தை போலியாக போட்டு அந்த கடையை காந்திசெல்வம் லோகநாதன் பெயருக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
5 பேர் மீது வழக்கு
இதனால் தான் முதலீடாக போட்ட ரூ.20 லட்சத்தை தராமல் ஏமாற்றி மோசடி செய்ததாகவும் கடைக்கு வந்தால் தன்னை கொலை செய்வதாக கொலை மிரட்டல் விடுத்ததாக சுகிதா அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் காந்திசெல்வம், அவரது மனைவி சபிதா, லோகநாதன், கோவிந்தராஜ், கணேசன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.