டாஸ்மாக் கடை ஊழியரிடம் வழிப்பறி செய்தவர் பட்டாக்கத்தியுடன் கைது

கலசபாக்கம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்து 19 ஆயிரம், இருசக்கர வாகனம் மற்றும் பட்டாகத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-12-01 18:04 GMT
கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே டாஸ்மாக் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வாலிபர் கைது செய்து 19 ஆயிரம், இருசக்கர வாகனம் மற்றும் பட்டாகத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டாஸ்மாக் ஊழியர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகா, கீழ்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 43) காஞ்சி காமராஜ் நகர், டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 24-ந் தேதி கடையில் விற்பனையை முடித்து கணக்கு பார்த்து விட்டு இரவு 9 மணியளவில் கடையை பூட்டினார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், அதை தடுக்க முற்பட்டபோது கத்தியால் வெட்டியதில் தனக்கு கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டதாகவும் டாஸ்மாக் கடையின் மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றுவிட்டதாகவும் கடலாடி போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார்.

தனிப்படை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் உத்தரவின்பேரில் போளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபடடனர்.

இந்த நிலையில் போலீசார் கலசபாக்கம் அருகே அருணகிரிமங்கலம் ரோட்டில் வாகன தணிக்கையில்  ஈடுபட்டனர்.

பறிமுதல்

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த செங்கம் தாலுகா ஆலத்தூர் கிராமம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது. 
அவரிடம் வழிப்பறி செய்த ரூ.19 ஆயிரம்,இருசக்கர வாகனம் மற்றும் பட்டாக்கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மணிகண்டனுடன் தூத்துக்குடி மாவட்டம் சேரகுளத்தை சேர்ந்த இசக்கி பாண்டியனுக்கும் (23) ெதாடர்பு உள்ளது. 

அவர் கோவையில் டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்த வழக்கில் கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்