விராலிமலை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கொடும்பாளூர் பெரிய குளம் பெண்கள் கும்மியடித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்
விராலிமலை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு கொடும்பாளூர் பெரிய குளம் நிரம்பியது. பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.;
விராலிமலை:
கொடும்பாளூர் பெரிய குளம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முன்பு இல்லாத வகையில் இந்த வருடம் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் விராலிமலை வட்டார பகுதிகளில் உள்ள குளம், கண்மாய்கள் நிரம்பி கலிங்கு வழியாக தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பெரிய குளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பி நேற்று காலை கலிங்கு வழியாக தண்ணீர் செல்கிறது.
இனிப்புகள் வழங்கப்பட்டது
இதையறிந்த அப்பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் திரண்டு வந்து கண்டு ரசித்ததுடன் மகிழ்ச்சியுடன் அதனை வரவேற்கும் விதமாக மலர்கள் தூவியும், பெண்கள் கும்மியடித்தும், இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் சார்பில் ஊர் காவல் தெய்வத்திற்கு தேங்காய் உடைத்து வழிபட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.