கோட்டை அகழி உபரிநீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற கோட்டை அகழி உபரிநீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2021-12-01 17:21 GMT
வேலூர்

ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற கோட்டை அகழி உபரிநீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடக்கிறது.

தேங்கி நிற்கும் தண்ணீர்

வேலூர் கோட்டை வளாகத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோட்டை அகழியில் கடந்த மாதம் 12-ந் தேதி தொடர் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் கோவிலில் இருந்து அபிஷேகநீர் செல்லும் வழியாக அகழி தண்ணீர் கோவிலுக்குள் புகுந்தது. மேலும் கோவிலில் உள்ள குளத்தின் நீர்மட்டமும் அதிகரித்து வெளியேறியது. அதனால் கோவில் வளாகம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கியது. முட்டியளவு தேங்கி நின்ற தண்ணீரில் பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி கோவில் அம்மன் கருவறைக்குள் தண்ணீர் தேங்கியது. அதைத்தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. உற்சவர் மற்றும் அம்மன் கோவில் ராஜகோபுரத்திற்கு வெளியே சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அங்கு சாமியை தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

கால்வாய் தூர்வாரும் பணி

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனின் உத்தரவின்படி முதற்கட்டமாக அபிஷேகநீர் செல்லும் வழி மணல்மூட்டைகள் வைத்து அடைக்கப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் தேங்கியிருந்த தண்ணீர் 2 மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி நேற்று நடந்தது. தொடர்ந்து அகழியில் காணப்படும் தண்ணீரை கால்வாய் வழியாக வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. கோட்டை அகழியின் உபரிநீர் வெளியேறும் கால்வாய் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் அந்த கால்வாய் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. 

இந்திய தொல்லியல்துறை வேலூர் கோட்ட முதுநிலை பராமரிப்பு அலுவலர் வரதராஜ்சுரேஷ், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கோட்டை அகழியின் உபரிநீர் வெளியேறும் கால்வாய் சாலைக்கு அடியில் கடந்து புதிய மீன்மார்க்கெட் அருகில் உள்ள கால்வாய் வழியாக நிக்கல்சன் கால்வாயுடன் இணைகிறது. தூர்ந்துபோன அந்த கால்வாய் பொக்லைன் மூலம் தோண்டப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கால்வாய் தோண்டப்பட்டால் அகழியில் உள்ள உபரிநீர் வெளியேறிவிடும். இதன்மூலம் கோவிலில் தண்ணீர் தேங்காமல் தடுக்க முடியும். இந்த பணிகள் ஓரிருநாளில் முடியும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்