குடியாத்தம் அருகே மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம்
குடியாத்தம் அருகே மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிலநடுக்கம்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி மற்றும் 25-ந் தேதி இரவு நேரங்களில் திடீரென சில வினாடிகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லைமேடு பகுதியில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மீண்டும் ஏற்பட்டது
தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அதில் இருந்து மீண்டுவருவதற்குள் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணி அளவில் மீண்டும் தட்டப்பாறையை அடுத்த மாரியம்மன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில வினாடிகள் பலத்த சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. பீரோ, கட்டில் சில அங்குலங்கள் நகர்ந்துள்ளன. கால்நடைகள் தொடர்ந்து கத்தியபடி இருந்துள்ளன. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
அதேபோல் நள்ளிரவு 12 மணி அளவில் மூலக்கொல்லை பகுதியில் பெருத்த சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பாதுகாப்பாக நின்றனர். அப்போதும் கால்நடைகள் கத்தியபடி இருந்துள்ளது. மீண்டும் சில நிமிடங்கள் கழித்து சில விநாடிகள் பெருத்த சத்தத்துடன் பூமி அதிர்ந்தது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இரவானாலே அச்சம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வருவாய்த் துறையினரும், அதிகாரிகளும் வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் இப்பகுதியில் நில நடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதா? என ஆய்வு செய்து அச்சத்தை போக்க வேண்டும். இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கிராம மக்கள் இரவு நேரம் வந்தாலே அச்சம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தனர்.