கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர் மழையால் அழுகிய மரவள்ளி கிழங்குகள் விவசாயிகள் கவலை
கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர் மழையால் மரவள்ளி கிழங்குகள் அழுகி போனது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்துள்ளது.
இதனால் விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இருப்பினும் நெல், கரும்பு, மரவள்ளிகிழங்கு போன்ற பல்வேறு வகையான பயிர்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அதன்படி, கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம், காட்டுக்கொட்டகை, தச்சூர், மாடூர், விளம்பாவூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மரவள்ளி சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள்.
தற்போது மழைநீரை வடிய செய்தாலும், மண்ணுக்குள் இருக்கும் கிழங்குகள் அழுகி போய்விட்டது. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
ஏற்கனவே மரவள்ளியில் வெள்ளை பூச்சி, சப்பாத்தி பூச்சி போன்ற நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்றி கொண்டு வந்த நிலையில், மழை வெள்ளத்தால் வீணாகி இருப்பது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.
இது தொடர்பாக மாவட்டத்தில் சேதவிவரங்களை கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.