விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக மழை செஞ்சியில் பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. செஞ்சி அருகே சிறு பாலம் உடைந்ததால் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டது;

Update: 2021-12-01 16:51 GMT

விழுப்புரம்

பரவலாக மழை

வளிமண்டல சுழற்சி மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக இடி-மின்னலுடன் தொடர் கனமழை பெய்தது. இந்த மழையினால் பெரும்பாலான ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. அதுபோல் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக கிராமப்புறங்களில் உள்ள பல தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

நேற்று முன்தினம் மழை ஓய்ந்து வெயில் அடிக்க தொடங்கிய நிலையில்  நள்ளிரவு விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம் நகரம் மட்டுமின்றி திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது.
ஏற்கனவே பெய்த மழையினால் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்திருந்த தண்ணீர் இன்னும் வடியாத நிலையில் நள்ளிரவு பெய்த மழையினால் மீண்டும் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

சிறு பாலம் உடைந்தது

செஞ்சியை அடுத்த அப்பம்பட்டிலிருந்து கோணை வழியாக மணலப்பாடி செல்லும் சாலையில் மணலப்பாடிக்கும், சின்ன பொண்ணம்பூண்டி கிராமத்துக்கும் இடையே உள்ள சிறு பாலம் அதிக நீர் வரத்தால் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் நாகந்தூர், சென்னாலூர், ஒதியத்தூர், நாகம் பூண்டி, வடகால், வரதராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்பவர்கள் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே ஏரிக்கு அருகில் உள்ள இந்த சாலையில் தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
செம்மேடு- 31.20, அவலூர்பேட்டை- 28, மணம்பூண்டி- 25, வானூர்- 21, வல்லம்- 21, விழுப்புரம்- 20, திண்டிவனம்- 20, வளத்தி- 18, வளவனூர்- 16, சூரப்பட்டு- 16, கஞ்சனூர்- 14, மரக்காணம்- 14, செஞ்சி- 13, முண்டியம்பாக்கம் 12.50, கோலியனூர்-12, கெடார்- 12, நேமூர்- 12, முகையூர்- 12, அனந்தபுரம்- 8.20, அரசூர்-2, திருவெண்ணெய்நல்லூர்- 1

மேலும் செய்திகள்