டீசலுடன் தண்ணீர் கலந்திருந்ததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்
பழனியில், டீசலுடன் தண்ணீர் கலந்திருந்ததால் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம் செய்தனர்.;
பழனி:
பழனியில், புதுதாராபுரம் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்று செயல்படுகிறது. இங்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலை செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த விற்பனை நிலையத்தில் விற்கப்பட்ட டீசல் தண்ணீர் போல் இருந்ததாகவும், இதனால் தங்களது வாகனங்கள் பழுதாகி விட்டதாகவும் சிலர் புகார் கூறினர்.
இந்தநிலையில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள டீசல் சேமிப்பு கலனை அங்குள்ள ஊழியர்கள் நேற்று திறந்து பார்த்தனர். அப்போது, அதற்குள் மழைநீர் தேங்கி கிடந்தது.
இதற்கிடையே அங்கு டீசல் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் டீசல் சேமிப்பு கலனில் மழைநீர் தேங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சேமிப்பு கலனை முறையாக பராமரிக்காததாலேயே மழைநீர் கலந்து விட்டது என்று கூறி அங்கிருந்த ஊழியர்களிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பழனி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.