திருக்கோவிலூர் அருகே கெடிலம் ஆற்று வெள்ளத்தில் காருடன் அடித்து செல்லப்பட்ட டிரைவர் பிணமாக மீட்பு

திருக்கோவிலூர் அருகே கெடிலம் ஆற்று வெள்ளத்தில் காருடன் அடித்து செல்லப்பட்ட டிரைவர் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-12-01 16:48 GMT
திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிளியூரை சேர்ந்தவர்கள் கிளியன், சங்கர் ஆவார்கள். இவர்கள் கடந்த 29-ந்தேதி இரவு 9 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த காசிலிங்கம் மகன் முருகன் என்பவரது வாடகை காரில், திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது,  மொகலார் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளத்தை அவர்கள் காரில் கடக்க முயன்றனர். ஆனால் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. இதில் கிளியன், சங்கர் ஆகியோர்  நீந்தி கரைக்கு திரும்பிவிட்டனர். 

3-வது நாளாக மீட்பு பணி

தெடர்ந்து முருகனை தேடும் பணி நேற்று முன்தினம் 2-வது நாளாக நடந்தது. இதில் டிரோன் கேமராக்கள் கொண்டும் தேடினர். இருப்பினும் முருகன் கிடைக்கவில்லை.

தொடர்ந்து  நேற்று 3-வது நாளாக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார், திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையிலான வீரர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து தேடும் பணியில் டுபட்டனர்.

கலெக்டர் பார்வையிட்டார்

இந்த நிலையில் நேற்று மீட்பு பணியில், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக அரக்கோணத்தில் இருந்து 16 வீரர்கள் வருகை தந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை  மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரன் நேரில் பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார்.

பிணமாக மீட்பு

 மதியம் 2 மணியளவில் தரைப்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் காரை கண்டுபிடித்தனர். தொடர்ந்து மீட்பு வீரர்கள் காரை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், காரை உடனடியாக எடுக்க முடியவில்லை.
இதையடுத்து, தண்ணீரின் உள்ளே மூழ்கி, பார்த்த போது காருக்குள் முருகன் பிணமாக கிடந்தார். 

இதையடுத்து அவரை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து காரை வெளியே எடுக்கும் முயற்சியையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

கரைக்கு கொண்டு வரப்பட்ட முருகனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். 

பின்னர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்