நாகை மாவட்டத்தில், மழை விட்ட பின்னரும் தண்ணீர் வடியாமல் குளம்போல் காட்சி அளிக்கும் வயல்வெளிகள் பயிர்களை காப்பாற்ற வழியில்லை என விவசாயிகள் விரக்தி
நாகை மாவட்டத்தில் மழை விட்ட பின்னரும் தண்ணீர் வடியாமல் வயல் வெளிகள் குளம்போல் காட்சி அளிக்கிறது. மழை நீர் வடியாததால் வயல்கள் குளம் போல் காட்சியளிக்கிறது. பயிர்களை காப்பாற்ற வழியில்லை என விவசாயிகள் விரக்தியுடன் கூறினர்.
நாகப்பட்டினம்:-
நாகை மாவட்டத்தில் மழை விட்ட பின்னரும் தண்ணீர் வடியாமல் வயல் வெளிகள் குளம்போல் காட்சி அளிக்கிறது. மழை நீர் வடியாததால் வயல்கள் குளம் போல் காட்சியளிக்கிறது. பயிர்களை காப்பாற்ற வழியில்லை என விவசாயிகள் விரக்தியுடன் கூறினர்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. நாகை மாவட்டத்தில் கடந்த மாதம் விட்டு, விட்டு கன மழை பெய்தது. நாகை அருகே உள்ள செல்லூர், பாலையூர், புலியூர், திருமருகல், திட்டச்சேரி, கீழ்வேளூர், கருங்கண்ணி, கீழையூர், அருந்தவம்புலம், பட்டமங்கலம், வடக்குவெளி, கிள்ளுகுடி உள்பட மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
தற்போது சில நாட்களாக மழை விட்ட பின்னரும் வயல்களில் தேங்கிய மழைநீர் வடியவில்லை. கருங்கண்ணி, கீழையூர், அருந்தவம்புலம், பட்டமங்கலம், வடக்குவெளி, கிள்ளுகுடி உள்ளிட்ட இடங்களில் வயல்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. வயல் வெளிகள் குளம்போல் காட்சி அளிக்கின்றன. தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் மழைநீரில் மூழ்கிய பயிர்களை காப்பாற்ற வழியில்லை என விரக்தியுடன் கூறுகிறார்கள்.
இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-
நாகையில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. கடந்த மாதம் 9-ந் தேதி பெய்த கன மழையால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா தாளடி செய்யப்பட்டிருந்த வயல்களை மழைநீர் சூழ்ந்தது. விவசாயிகள் நீரை வயல்களில் இருந்து வடியவைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீண்டும் மழை
பின்னர் 4 நாட்களாக மழை முழுவதுமாக விட்டிருந்த நிலையில் ஒரு சில இடங்களில் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய தொடங்கியது. இதையடுத்து விவசாயிகள் சம்பா-தாளடி நெற்பயிர்களை காப்பாற்றும் முயற்சியிலும், சாகுபடி பணியிலும் மும்முரம் காட்டினர். இதையடுத்து கடந்த 24-ந் தேதியில் இருந்து 4 நாட்களுக்கும் மேலாக மீண்டும் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதன் காரணமாக வயல்களில் மீண்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. சம்பா-தாளடி பயிர்களை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல இடங்களில் மழைநீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. வடிகால் வாய்க்கால்கள், முகத்துவாரங்கள் தூர்வாரப்படாததால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் ஒட்டுமொத்தமாக அனைத்தும் பதராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் முழுமையான கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.30 ஆயிரம் நிவாரணம்
தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சரபோஜி கூறும்போது:-
தொடர் கனமழையால் இளம் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மழைநீர் இன்னும் வடியவில்லை. செல்லூர் பாலையூர், அழிஞ்சமங்கலம், பெருங்கடம்பனூர், பாப்பாகோவில், கருவேலங்கடை, பழையனூர், சங்கமங்கலம், ஒன்றியத்தில் நரிமணம், திருப்பயத்தங்குடி, கொட்டரகுடி, திருக்கண்ணபுரம், பாக்கம் கோட்டூர் உள்பட நாகை மாவட்டம் முழுவதும் மழையால் சம்பா தாளடி பயிர்கள் அழுகி வருகிறது.
எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் 2020-21 ஆண்டிற்கு பயிர் காப்பீட்டில் விடுபட்ட 80 கிராமங்களை மறுஆய்வு செய்து காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது:-
நாகை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தேங்கிய மழைநீர் முழுவதும் வடிந்த பிறகு தான் கணக்கெடுப்பு பணியானது நடத்தப்படும். அப்போதுதான் துல்லியமான பாதிப்பு குறித்த நிலவரம் தெரியவரும் என்றார்.