‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகார் பெட்டி செய்தி எதிரொலி
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் பெரிய கிராமத்ைத சேர்ந்தவர் டெக்கான். இவர், அங்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக மின்கம்பத்தின் அடிப்பகுதியில் காங்கிரீட் போட்டு சரிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
நெல்லை சந்திப்பு பாபுஜிநகரில் இருந்து தெற்கு பாலபாக்யநகர் வரையிலும் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக கிடக்கிறது. தற்போது பெய்த மழையால் அந்த சாலைகளிலும், அங்குள்ள குடியிருப்புகளையும் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. மேலும், பாதாள சாக்கடை கழிவுநீரும் இந்த தண்ணீரில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஒரு வாரமாக தேங்கி கிடக்கும் தண்ணீரில் பாசி படர்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும், சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, போர்க்கால அடிப்படையில் மழைநீரை அகற்றிவிட்டு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சுப்பிரமணியன், பாபுஜிநகர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
பாளையங்கோட்டை 20-வது வார்டு அன்னை இந்திராநகர் பகுதியில் குப்பைகள் சரிவர அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிரவன், பாளையங்கோட்டை.
வேகத்தடை அவசியம்
களக்காடு பத்மநேரி பாலத்தில் அதிகமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இருபுறமும் பாலத்தின் பக்கவாட்டில் மோதுவது போல வேகமாக செல்கிறார்கள். மேலும், பஸ்சில் இருந்து இறங்கி செல்லும் மக்கள் எளிதில் மறுபுறம் கடந்து செல்ல முடிவதில்லை. எனவே, பாலத்தின் வடக்கு பகுதியில் வேகத்தடை அவசியமாகும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், பத்மநேரி.
மின்விளக்கு வசதி
அம்பை அருகே முடப்பாலம் புதுகாலனியில் மின்கம்பம் அமைத்து பல ஆண்டுகள் ஆகியும் அதில் மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அங்கு மின்விளக்கு அமைத்து ெவளிச்சம் பிறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
வெள்ளப்பாண்டி, முடப்பாலம்.
சேதமடைந்த வழிகாட்டி பலகை
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலை முன்பு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வழிகாட்டி பலகை சேதம் அடைந்துள்ளது. மேலும் அதன் கம்பிகள் சாய்ந்த நிலையில் உள்ளதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வழிகாட்டி பலகையை சரிசெய்யவோ அல்லது அதனை அகற்றிவிட்டு புதிய வழிகாட்டி பலகை வைப்பதற்கோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ.ராஜீவ்காந்தி, செங்கோட்டை.
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளம் பஞ்சாயத்து போப் காலனியில் தெரு குழாய் உடைந்து கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாக செல்கிறது. இதனை அதிகாரிகள் உடனடியாக கவனித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
எஸ்.பால்துரை, சாயர்புரம்.
பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடம்
திருச்செந்தூர் நகரப்பஞ்சாயத்துக்கு உட்பட்ட நா.முத்தையாபுரம் கிராமத்தில் சுமார் 800-க்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடம் தற்போது பழுதடைந்து உள்ளது. மேற்கூரையின் உள்பகுதியில் ஆங்காங்கே பெயர்ந்து உள்ளது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகுவதால் ரேஷன் பொருட்கள் நனைந்து வீணாகிறது. எனவே, இந்த கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மு.தமிழ்பரிதி, மேலத் திருச்செந்தூர்.
பயணியர் நிழற்குடை தேவை
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் உள்ளது. மேலும் பிரசித்தி பெற்ற வெங்டாசலபதி கோவிலும், சிவன் கோவிலும் உள்ளது. சுற்று வட்டார கிராமமான ஆழ்வார்கற்குளம், கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை போன்ற கிராம மக்களும் இந்த பஸ் நிறுத்தத்தையே பயன்படுத்துகின்றனர். இங்கு பயணியர் நிழற்குடை இல்லாததால் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மழைக்காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, அங்கு இருமார்க்கத்திலும் பயணியர் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
கே.சம்பத், ஆழ்வார்திருநகரி.