பொள்ளாச்சி
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய ஆய்வை தொடர்ந்து 12 அரசு பஸ்களின் தகுதி சான்று ரத்து செய்யப் பட்டது. மேற்கூரை பழுதான நிலையில் இருந்த பஸ்சை மீண்டும் பணிமனைக்கு திருப்பி அனுப்பினர்.
மழைநீர் ஒழுகும் அரசு பஸ்கள்
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொள்ளாச்சியில் இருந்து வெளியூர்களுக்கும், சுற்று வட்டார கிராமங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஆண்டுக்கு ஒரு முறை பஸ்களின் தகுதியை (எப்.சி.) ஆய்வு செய்து வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் சான்று கொடுக்கப்படுகிறது.
இதை தவிர மலைப்பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களுக்கு 6 மாதத்திற்கு ஒரு சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, அரசு போக்குவரத்து கழக பஸ் நிலைய மேலாளர் ராம்குமார் ஆகி யோர் பஸ்களில் ஆய்வு மேற்கொண்டனர். பஸ்களின் மேற்கூரை பழுதாகி உள்ளதா? உள்ளே சுத்தமாக உள்ளதா? என்று ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் செல்லும் டவுன் பஸ் வந்து நின்றது. அந்த பஸ்சை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பஸ்சின் மேற்கூரை பழுதடைந்து காணப்பட்டது. மேலும் உள்ளே விரிசல் ஏற்பட்டு இருந்தது.
திருப்பி அனுப்பினர்
இதையடுத்து போக்குவரத்திற்கு தகுதி இல்லை என்று அந்த பஸ்சை மீண்டும் பணிமனைக்கு திருப்பி அனுப்பினர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். பின்னர் வேறு பஸ் வரவழைக்கப்பட்டு மீண்டும் கோபாலபுரம் செல்லும் பயணிகள் சென்றனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறியதாவது:-
மழைக்காலத்தையொட்டி பொள்ளாச்சி பகுதியில் 237 அரசு பஸ்கள் ஆய்வு நடத்தப்பட்டது. அவற்றின் மேற்கூரைகள் நன்றாக இருக்கிறதா, பிரேக் சரியாக பிடிக்கிறதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தகுதி சான்று ரத்து
இதில் போக்குவரத்திற்கு தகுதி இல்லாத 12 பஸ்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. அந்த பஸ்களில் 7 நாட்களுக்குள் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு பஸ்சை ஆய்வுக்கு உட்படுத்தி மீண்டும் தகுதி சான்று வழங்கப்படும்.
இதேபோன்று சில குறைபாடுகள் கண்டறியப்பட்ட பஸ்களுக்கு 10 நாட்களில் அவற்றை சரிசெய்வதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.