மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இலுப்பநத்தம் கிராமம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கார்டிரைவர் ரங்கராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி(வயது36). தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களது மகன் நிக்கேஷ் (15). இவர்தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்த நிக்கேஷ் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ரங்கராஜ் செல்போன் வைத்திருந்தால் தனது மகன் படிக்க மாட்டான் என்று நினைத்து அவன் வைத்திருந்த செல்போனை வாங்கிக் கொண்டு கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டதாக தெரிகிறது.
இதனால் கடந்த 4 நாட்களாக நிக்கேஷ் விரக்தியுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி நிக்கேஷ் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர் சிறிதுநேரம் கழித்து படுக்கை அறைக்குள் சென்றார். தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.
இந்த நிலையில் தையல் கடையில் இருந்து வீட்டுக்கு வந்த உமா மகேஸ்வரி, மகன் நிக்கேஷ் படுக்கை அறைக்குள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
அவரது கதறல் சத்தம் கேட்ட உடனே அக்கம், பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து நிக்கேசை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் நிக்கேஷ் வழியிலேயே இறந்தார்.இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.