பிஏபி வாய்க்கால் ஷட்டரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வட்டமலை கரை ஓடை அணைக்கு வந்து சேர்ந்தது
பிஏபி வாய்க்கால் ஷட்டரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வட்டமலை கரை ஓடை அணைக்கு வந்து சேர்ந்தது;
வெள்ளகோவில்,
பொங்கலூர் அருகே கள்ளிப்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் ஷட்டரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வட்டமலை கரை ஓடை அணைக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து பொங்கல் வைத்து, பூக்கள் தூவி விவசாயிகள் வழிபாடு செய்தனர்.
வட்டமலை கரை ஓடை அணை
வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் 1980-ம் ஆண்டு 600 ஏக்கர் பரப்பளவில் 27 அடி உயரத்தில் வட்டமலை கரை ஓடை கரை அணை கட்டப்பட்டது. இந்த அணை மூலம் 30 கிராமங்கள் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த அணைக்கு 25 ஆண்டுகளாக தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் அந்த பகுதியில் கடும் வறட்சி நிலவியது. வட்டலை கரை கரை ஓடை அணை பாசன பகுதிகள் தரிசானது.
இதனால் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை திருப்பூர் மாவட்டத்தில் தீவிரம் அடைந்தது. இதனால் அணை மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகமானது. மாவட்டத்தின் பிரதான அணைகளான அமராவதி, திருமூர்த்தி, உப்பாறு அணை நிரம்பியது.
பொங்கல் வைத்து வழிபாடு
இதையடுத்து பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து பொங்கலூர் அருகே உள்ள கள்ளிபாளையம் ஷட்டரிலிருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது, இந்த தண்ணீர் நேற்று மாலை வட்டமலை கரை ஓடை அணைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அணையின் கரைப்பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் தண்ணீர் அணையை வந்து சேர்ந்ததும் மலர் தூவியும் வரவேற்றனர்.