குடியிருப்பு பகுதியில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்பு

திருவண்ணாமலை பகுதியில் பெய்த கனமழையால் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியிலிருந்து உபரிநீர் மீண்டும் ெவளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாயினர்.

Update: 2021-12-01 15:05 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை பகுதியில் பெய்த கனமழையால் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியிலிருந்து உபரிநீர் மீண்டும் ெவளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாயினர். இதேபோல் வந்தவாசி பகுதியிலும் ஏரி உடைந்து வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

கனமழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. 
கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரி நீர் மீண்டும் அதிகளவில் வெளியேறியதால் திருவண்ணாமலை-போளூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 
இதனால் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஜெய்பீம்நகர், குறிஞ்சி நகர், பொன்னுசாமி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் அவலூர்பேட்டை சாலையில் உள்ள சேரியந்தல் ஏரியில் இருந்தும் மழை வெள்ளம் வெளியேறியதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாயினர். 
மழையின் காரணமாக பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. 
இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். தொடர்ந்து நேற்று பகலிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. 
இதில் அதிகபட்சமாக வந்தவாசியில் 86 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் பதிவாகி உள்ள மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு

 திருவண்ணாமலை- 52, சேத்துப்பட்டு- 28, செங்கம்- 25.8, கீழ்பெண்ணாத்தூர்- 20.8, கலசப்பாக்கம்- 14, போளூர்- 12.8, ஜமுனாமரத்தூர்- 8, ஆரணி- 7, தண்டராம்பட்டு- 5.6, செய்யாறு- 5, வெம்பாக்கம்- 3.
வந்தவாசி அருகே ஏரி உடைந்தது
வந்தவாசியை அடுத்த நல்லூர் பழைய ஏரி, நல்லூர் புதிய ஏரி, கண்டையநல்லூர் ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரிநீர் கடுவந்தாங்கல் ஏரிக்கு வரும். இந்த ஏரியின் கரைகள் பலமில்லாத நிலையில் தெற்கு பகுதியில் 2 இடங்களில் கரை உடைந்ததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. 
அந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததில் 300 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு அதில் விளைவிக்கப்பட்டிருந்த நெல், கரும்பு ஆகியவை சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் நேரில் பார்வையிட்டு உடனடியாக இதற்கான சிறப்பு பொறியாளர் மேற்பார்வையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். அப்போது தாசில்தார் முருகானந்தம் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்