கூடலூர் பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது
கூடலூர் பஸ் நிலையத்தில் பிளஸ்-2 மாணவரை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது;
கூடலூர்
கூடலூர் தாலுகா பாண்டியாறு குடல் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கூடலூர் பஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது பஸ் நிலையத்தில் நின்றிருந்த சிலர் தனது நண்பரிடம் பிரச்சினை செய்கிறாயா என கூறி அந்த மாணவரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திடீரென அந்த கும்பல் மாணவரை இரும்பு கம்பியால் தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து, வலி தாங்காமல் சத்தம் போட்டார். இதைக்கண்ட பஸ் நிலையத்தில் நின்றிருந்த மாணவிகள், பெண்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியநாத் உள்ளிட்ட போலீசார் பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, அவரை தாக்கிய கூடலூர் கே.கே. நகரை சேர்ந்த டேவிட் (21) என்பவரை கைது செய்தனர். மேலும் சஞ்சய், ஆல்பர்ட், மனோஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு, அவர்களை தேடி வருகின்றனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, முன்விரோதம் காரணமாக மாணவர் மீது தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.