கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை
கிருஷ்ணகிரி, டிச.2-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவித்துள்ளார்.
பேட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தற்போது தினமும் 10-க்கும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் உருமாறி ஒமைக்ரான் என்ற ெபயரில் புதிதாக பரவி வருவவதாக வெளிநாடுகளில் இருந்து தகவல் வந்துள்ளது.
அந்த நோய் நமது நாட்டில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான 2 தவணை தடுப்பூசிகளையும் கட்டாயம் பொதுமக்கள் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம், நம்மையும், நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
பொது இடங்களுக்கு செல்ல தடை
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் ரேஷன் கடைகள், வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், பெட்ரோல் விற்பனை நிலயைங்கள், தனியார், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பள்ளி- கல்லூரிகள், விளையாட்டு மைதானங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், துணிகடைகள், டீக்கடைகள், வங்கிகள், கடை வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல நாளை முதல் (அதாவது இன்று) தடை விதிக்கப்படுகிறது.
கடும் நடவடிக்கை
மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 15 லட்சத்து 2 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் ஆவர். இதில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 500 பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்னர். இன்னும் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி போடாதவர்கள் அரசின் இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும்.
தவறும்பட்சத்தில் பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள், நிறுவனங்களிடம் இருந்து கடந்த ஒராண்டில் ரூ.2 கோடியே 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 4-ந் தேதி (சனிக்கிழமை) 13-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடக்கிறது. இதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் கலந்துக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார். அப்போது நலப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
துண்டு பிரசுரங்கள்
முன்னதாக நடந்த நிகழ்ச்சி்யில் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிவெளியிட்டார்.