தூத்துக்குடியில் 6 நாட்களாக குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி நேற்று 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தூத்துக்குடியில் 6 நாட்களாக குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றக்கோரி நேற்று 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 6 நாட்களாக வடியாத வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இதையடுத்து மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி 3 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
வடியாத வெள்ளம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 25-ந்தேதி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. தாமிரபரணி ஆற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
அதேபோன்று குளங்களுக்கு அதிக அளவில் தண்ணீர் வருவதால் கடம்பாகுளம் உள்ளிட்ட பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் தண்ணீர் பந்தல் அருகே கடந்த ஒரு வாரமாக சாலையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே தண்ணீரை கடந்து சென்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த தரைமட்ட பாலத்தின் அருகே ஒரு உயர்மட்டப்பாலம் அமைக்கப்பட்டது. அதே போன்று இந்த தரைமட்டப்பாலமும் உயர்மட்ட பாலமாக அமைக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பாலம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
சாலைமறியல்
இதேபோன்று தூத்துக்குடி மாநகர பகுதியில் வழக்கம்போல் முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர், ராம்நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. கடந்த 6 நாட்களாக அந்த பகுதியில் மழைநீர் வடிந்த பாடில்லை. இதனால் தீவுகளில் வசிப்பது போன்று மக்கள் வீடுகளில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி ராம்நகர் பகுதி மக்கள் தேங்கி உள்ள மழைநீரை அகற்றக் கோரி, தூத்துக்குடி- எட்டயபுரம் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோன்று தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி மற்றும் சுந்தரவேல்புரம் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி, அந்த பகுதி மக்கள் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
விடுமுறை
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பெரும்பாலான பள்ளிக்கூட வளாகங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிக்கூடங்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது.
இதனால் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். தொடர்ந்து பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.