நவம்பர் மாதம் கூடுதலாக 90 சதவீதம் மழை
நவம்பர் மாதம் கூடுதலாக 90 சதவீதம் மழை
கோவை
கோவை மாவட்டத்தில் தென்மேற்குபருவ மழை அக்டோபர் 24-ந் தேதி முடிவடைந்தது. அடுத்த நாள் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் கடந்த சில நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் கருமேகங்களு டன் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.
இதையடுத்து கவுண்டம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், ராமநாதபுரம், பேரூர், காந்திபுரம், உக்கடம், கோவை ரெயில் நிலையம் மற்றும் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று காலை மற்றும் மாலை நேரத்தில் மழை பெய்தது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் அலுவலகம் சென்றவர்கள் அவதிப்பட்டனர். மாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கோவை குற்றாலம் மற்றும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் சிறுவாணி அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 44¾ அடியாக நீடிக்கிறது. கோவையில் நேற்று பகல் நேரத்தில் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காற்றில் ஈரப்பதம் 94 சதவீதம் இருந்தது. காற்றின் வேகம் மணிக்கு 6 கிலோ மீட்டர் என்ற அளவில் இருந்தது.
இது குறித்து கோவை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 30 வருட கணக்குப்படி, நவம்பர் மாதம் சராசரி மழை 143.9 மில்லிமீட்டர். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 271.9 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது. இது வழக்கத்தை விட 90 சதவீதம் கூடுதல் மழை ஆகும்.
கோவை மாவட்டத்திற்கு 3 மாத கால வடகிழக்கு பருவமழையின் சராசரி அளவு 363.4 மில்லி மீட்டர்.
ஆனால் இந்த ஆண்டு 30 நாட்களுக்குள் சராசரி அளவை தாண்டி 462.5 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது. இதனால் தற்போது வரை சராசரியைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்யும் நாட்கள் குறைந்து, அதிக அளவு மழை பெய்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 120 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழையை தான், மண் கிரகிக்க முடியும். அதற்குமேல் பெய்யும் மழைநீர் வீணாக சென்று விடுகிறது. அவ்வாறு செல்லும் மழை நீரை, குளங்கள் மற்றும் அணைகளில் சேமிக்க வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.