ஆழ்வார்குறிச்சி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது பொதுமக்கள் அவதி

ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது

Update: 2021-11-30 21:28 GMT
கடையம்:
ஆழ்வார்குறிச்சி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
சுரங்கப்பாதை
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட செங்கானூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 500 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை - தென்காசி இருப்பு பாதையில் இருந்த ெரயில்வே கேட், 2017-ம் ஆண்டு அகற்றப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த இந்த சுரங்கப்பாதையில் மழை காலங்களில் பெருமளவு தண்ணீரும், மற்ற நாட்களில் நீருற்று காரணமாக முட்டளவுக்கு தண்ணீரும் தேங்கி கிடக்கிறது.
இதனால் கிராம மக்கள், இவ்வழியாக கடந்து செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக மாற்றுப்பாதை கேட்டு ெரயில் மறியல் உள்பட தொடர் போராட்டங்களை நடத்தினர். கடந்த சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்து இருந்தனர். அப்போது அதிகாரிகள் சரி செய்ய நடவடிக்கை எடுப்போம் என கூறியதால் போராட்டத்தை கைவிட்டனர்.
மழைநீர் தேங்கியது
இந்த நிலையில தற்போது பெய்துவரும் மழை காரணமாக அந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மண் சரிவும், கற்கள் பெயர்ந்தும் விழுந்தன.
ஏற்கனவே பஸ் வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழைநீர் தேங்கியதால் நேற்று பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டனர். எனவே மாற்றுப்பாதை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
.............

மேலும் செய்திகள்