தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-30 21:00 GMT
குண்டும், குழியுமான சாலை
வெள்ளிமலை பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளமோடி அருகே உள்ள கட்டைக்காடுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. கட்டைக்காட்டில் 500-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. பள்ளி குழந்தைகள் மட்டுமின்றி அனைவரும் பயன்படுத்தும் பாதையில் இரு சக்கர வாகனங்களும் தடுமாறிய நிலையில் தான் செல்கின்றன. இரவு நேரங்களில் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு காங்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ஜுன், வெள்ளமோடி.

கட்டிடம் சீரமைக்கப்படுமா?
கோதநல்லூர் பஞ்சாயத்துக்குட்பட்ட ஈத்தவிளையில் செயல்படும் அங்கன்வாடி தொடக்கப்பள்ளி மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து உள்ளது. அதை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும், இது வரை கட்டிடம் சீரமைக்கப்படவில்லை. தற்போது குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் இடிந்து விழும் நிலையில் கட்டிடம் உள்ளது. எனவே அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். 
-அனிதா, ஈத்தவிளை

காத்திருக்கும் ஆபத்து
சாமியார் மடத்துக்கும், இரவிபுதூர்கடைக்கும் இடைப்பட்ட பகுதியான புலிப்பனத்தில் இருந்து குட்டைக்குழி செல்லும் சாலையில் பள்ளிக்கூடம் அருகில் மின்கம்பம் ஒன்று உள்ளது. அது ஏற்கனவே பழுதானதால், இன்னொரு கம்பம் தாங்கி நிற்கிறது. தற்போது மின்கம்பத்தின் மேல் பூச்சுகள் பெயர்ந்து உள்பகுதியில் உள்ள கம்பிகள் வெளியே தெரியும்படி வளைந்து உள்ளது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருக்கிறது. இந்த பகுதியில் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அதிக அளவு சென்று வருகிறது. எனவே அசம்பாவிதம் நடப்பதற்கு முன் மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.ஜோஸ்வா, குட்டைக்குழி.

தொற்று பரவும் அபாயம்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தேரேகால்புதூர் அருகே உள்ள புரவசேரியை அடுத்த பிரேம் நகரில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அந்த நீர் அகற்றப்படாததால், கொசுக்கள் உற்பத்தியாவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமசுப்பு, பிரேம்நகர்.

மாற்றி அமைக்க வேண்டிய மின்கம்பம்
இடைக்கோடு பேரூராட்சியில் குழியோடல்விளை பகுதியில்  தெருவின் நடுவில் மின்கம்பம் அமைத்து உள்ளனர். இதனால் இரு சக்கர வாகனங்கள் தவிர இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வீட்டில் முதியவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் கூட அவர்களை அழைத்து செல்ல பெரும் அவதிப்பட வேண்டியது இருக்கிறது. எனவே இந்த மின்கம்பத்தை மாற்றி அமைத்து அனைத்து வாகனங்களும் சென்று வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கி.லாலாஜி, இடைக்கோடு.

மழை நீரை வெளியேற்ற வேண்டும்
புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்குதேரிவிளை அருகில் கனியான்விளை பகுதியில் உள்ள ஓடை வழியாக தண்ணீர் கடலுக்கு செல்வது வழக்கம். அந்த ஓடையை யாரோ அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பெய்த மழை நீர் எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து வடியாமல் நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.. எனவே தெற்குதேரிவிளை பகுதியில் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விஜயகுமார், தெற்குதேரிவிளை.

மேலும் செய்திகள்