1000 ஏக்கர் நெற்பயிர் மழையால் சாய்ந்தன
உசிலம்பட்டி அருகே மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே மழையால் 1000 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தொடர் மழை
உசிலம்பட்டி பகுதியில் வைகை ஆற்றங்கரையோரம் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து உள்ளனர். கிணற்று பாசனத்தை நம்பியும் பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வைகை ஆற்றங்கரையோரம் உள்ள நெற்பயிர் நன்கு வளர்ந்து கதிர் பிடிக்கும் தருவாயில் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உசிலம்பட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. செல்லம்பட்டி உசிலம்பட்டி ஆகிய ஒன்றியத்தில் உள்ள சொக்கத்தேவன்பட்டி, வாலாந்தூர், நாட்டாபட்டி, குப்பணம்பட்டி, நாட்டாமங்கலம், மானூத்து, அல்லிகுண்டம், ஜோதில் நாயக்கனூர், மீனாட்சிபுரம், சடைச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.
நெற்பயிர்கள் சாய்ந்தன
இதனால் உசிலம்பட்டி பகுதியில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கதிர் பிடிக்கும் தருவாயில் உள்ள நெற்பயிர்கள் தரையில் சாய்ந்தன. சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து உள்ளன.
இதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடித்து உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது, வழக்கம் போல புரட்டாசி மாதம் நெல் நடவு செய்தோம். கார்த்திகை மாதம் கதிர் பிடிக்கும் தருணத்தில் தற்போது பெய்த மழையால் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் அவை அழுகி விடும். தற்போது உசிலம்பட்டி பகுதியில் வைகை ஆற்றங்கரையோரம் பயிரிடப்பட்ட சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து சேதம் அடைந்து உள்ளன. எனவே மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.