அயோத்தியாப்பட்டணம் அருகே கிணற்றில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலி நண்பர்களுடன் குளிக்கச்சென்ற போது பரிதாபம்
அயோத்தியாப்பட்டணம் அருகே நண்பர்களுடன் குளிக்கச்சென்ற கட்டிட தொழிலாளி கிணற்றில் மூழ்கி பலியானார்.
அயோத்தியாப்பட்டணம்
கட்டிட தொழிலாளி
அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பெரிய கொண்டாபுரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24), கட்டிட தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் மாலை குளிப்பதற்காக நண்பர்களுடன் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள விவசாய கிணற்றுக்குசென்றார். அங்கு கிணற்றில் குதித்த அவர் நீண்டநேரமாகியும் மேலே வராததால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து பெரியகவுண்டாபுரம் கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தகவலின் பேரில் காரிப்பட்டி போலீசார் மற்றும் வாழப்பாடி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர் கிணற்றில் கிருஷ்ணமூர்த்தியை தேடினர். அதிக அளவு தண்ணீர் இருந்ததால் அவரது உடல் கிடைக்கவில்லை.
உடல் மீட்பு
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதல் கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். கிணற்றில் நீர் வற்றியதை அடுத்து நேற்று காலை 10 மணி அளவில் கிருஷ்ணமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டது. இதன் பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணமூர்த்தி குடிபோதையில் கிணற்றில் குதித்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.