பிளஸ்-2 மாணவி புகாரின் பேரில் போக்சோ வழக்கில் கைதான கராத்தே மாஸ்டரை காரில் கடத்தி தாக்கிய கும்பல் போலீசார் தீவிர விசாரணை

கருமந்துறையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கராத்தே மாஸ்டரை காரில் கடத்தி தாக்கிய கும்பல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-11-30 20:18 GMT
பெத்தநாயக்கன்பாளையம்
கராத்தே மாஸ்டர் கைது
சேலம் மாவட்டம் கருமந்துறை ஞானதீபம் தனியார் பள்ளியில் கராத்தே மாஸ்டராக ஆத்தூர் சீலியம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா (வயது 46) என்பவர் பணியாற்றி வந்தார். அவர் அந்த பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. 
இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் கராத்தே மாஸ்டர் ராஜா, பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் தேவராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 27-ந் தேதி அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கராத்தே மாஸ்டர் ராஜாவிடம் அவரது உடலில் உள்ள காயங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 
புகார்
அப்போது தான் அவர் போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஒரு கும்பலால் கடத்தி தாக்கப்பட்டதாக அதிர்ச்சி அளிக்கும் புகார் ஒன்றை போலீசாரிடம் கூறியுள்ளார். 
இது தொடர்பாக அவர் போலீசாரிடம் கூறியிருப்பதாவது:-
நான் தனியார் பள்ளி ஒன்றில் கராத்தே மாஸ்டராக பணிபுரிந்து வருகிறேன். கொரோனா காலத்தில் எனது பணத்தேவைக்காக இட்லி, தோசை ஆர்டர் எடுத்து சமைத்து கொடுத்து வந்தேன். 
காரில் கடத்தல்
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி செல்போனில் என்னை ஒருவர் தொடர்பு கொண்டு தங்களுக்கு 200 இட்லி, 200 தோசை வேண்டும் என ஆர்டர் கொடுத்தார். அதற்குரிய தொகையை செல்போனில் கூகுள் பே மூலம் அனுப்பிய அந்த நபர், பார்சலை புத்திரகவுண்டம்பாளையம் வாரச்சந்தை அருகே கொண்டு வரச்சொன்னார். 
அதன்பேரில் டிபன் பார்சலை கொடுக்க எடுத்து சென்றேன். அங்கு பார்சலை காரில் இருந்த 8 பேர் கும்பல் பெற்றுக்கொண்டது. பின்னர் எனது முகத்தில் அவர்கள் வைத்திருந்த மிளகாய் பொடியை தூவி என்னை காரில் ஏற்றிக்கொண்டு வெள்ளிமலை பகுதிக்கு கடத்தி சென்றனர். 
தாக்குதல்
அங்கு அவர்கள் என்னை சரமாரியாக தாக்கி விட்டு காயங்களுடன் மாலை 4 மணியளவில் போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். அதன்பின்னரே என்னை கருமந்துறை போலீசார் கைது செய்தனர். எனவே என்னை கடத்தி சென்று தாக்கிய 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
8 பேர் மீது வழக்கு
இந்த புகாரின் பேரில் 8 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப்பதிவு செய்த கருமந்துறை போலீசார், அவர்கள் யார்? எதற்காக கராத்தே மாஸ்டரை கடத்தி தாக்கினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரை காரில் கடத்தி தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது கருமந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்