இரட்டை கொலை வழக்கில் பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

சேலத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் பெயிண்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2021-11-30 20:18 GMT
சேலம்,
அண்ணன், தம்பி
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை புவனகணபதி தெருவை சேர்ந்தவர் பட்டாபி. இவருடைய மகன்கள் ஓபுளி (வயது 35), மாதேஸ் (28). அவர்களுக்கு திருமணமாகவில்லை. கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் சரியாக வருமானம் கிடைக்காததால் பட்டாபி தனது மகன்கள் 2 பேருடன் சேலம் அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள தலைவெட்டி முனியப்பன் கோவில் பகுதியில் பகல் வேளையில் தங்கி இருந்தனர். அப்போது தன்னார்வலர்கள் கொடுத்த உணவுகளை வாங்கி அவர்கள் சாப்பிட்டு வந்தனர்.
பின்னர் இரவில் அவர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கினர். அப்போது அவர்களுக்கும், குகை இந்திரா நகரை சேர்ந்த பெயிண்டர் செல்வகுமார் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்த செல்வகுமார் மற்றும் ஓபுளி, மாதேஸ் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். 
ஆயுள் தண்டனை
இந்த நிலையில் ஓபுளி, மாதேஸ் ஆகியோர் செல்வகுமாரிடம் அடிக்கடி மதுகேட்டு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி குளிர்பானத்தில் மது மற்றும் பெயிண்டு கலப்பதற்கு பயன்படுத்தப்படும் சயனைடை கலந்து அவர்களுக்கு கொடுத்தார். இதை வாங்கி குடித்த ஓபுளி, மாதேஸ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். 
இந்த இரட்டை கொலை தொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அண்ணன், தம்பியை கொலை செய்த குற்றத்திற்காக பெயிண்டர் செல்வகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி குமரகுரு தீர்ப்பு அளித்தார்.

மேலும் செய்திகள்