தலையில் கல்லைப்போட்டு பிச்சைக்காரர் படுகொலை

மைசூருவில், தலையில் கல்லைப்போட்டு பிச்சைக்காரரை படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2021-11-30 20:17 GMT
மைசூரு: மைசூருவில், தலையில் கல்லைப்போட்டு பிச்சைக்காரரை படுகொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பிச்சைக்காரர் படுகொலை

மைசூரு நகரம் அரண்மனை பகுதியில் காவிரி நீர்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். மேலும் அவர், இரவு நேரத்தில் காவிரி நீர்வாரிய அலுவலக வளாக கட்டிடத்தில் தூங்குவதை வழக்கமாக வைத்து  இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அலுவலகத்திற்கு வேலைக்காக அதிகாரிகள், ஊழியர்கள் வந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது. அதாவது அலுவலக வளாகத்தில் தலைநசுங்கிய நிலையில் பிச்சைக்காரர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தக்கறையுடன் ஒரு பெரிய கல் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த காவிரி நீர்வாரிய அதிகாரிகள், கே.ஆர். போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

வலைவீச்சு

அதில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் காவிரி நீர்வாரிய அலுவலக வளாகத்தில் படுத்து தூங்கிய பிச்சைக்காரரை, மர்மநபர்கள் தகராறு செய்து தலையில் கல்லைபோட்டு படுகொலை செய்தது தெரியவந்தது. ஆனால் அவர்கள் யார், என்ன காரணத்திற்காக பிச்சைக்காரரை கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. இதையடுத்து கொலையான பிச்சைக்காரரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கே.ஆர். ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி பார்வையிட்டனர். ஆனால் அதில் பிச்சைக்காரரை, மர்மநபர்கள் கொலை செய்வது தொடர்பான காட்சிகள் இல்லை. இதுகுறித்து கே.ஆர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிச்சைக்காரரை கொன்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்