தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-11-30 19:52 GMT
சேறும், சகதியுமான சாலை

சேலம் மாவட்டம் இரும்பாலை ரோட்டில் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி எதிரே அமைந்துள்ளது ரத்னா கார்டன் குடியிருப்பு. இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த தார்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதான தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பி.கே.பெத்தனப்பள்ளி ஊராட்சி கங்கசந்திரம் கிராமத்தில் சாலை பல ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இந்த வழியில் பயணம் செய்வது மிகவும் கடினமாக உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை அமைத்திட வேண்டும்.
-ஊர்மக்கள், கங்கசந்திரம், கிருஷ்ணகிரி.
===
மீண்டும் இயக்கப்படுமா? டவுன் பஸ்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து ஓ-16 என்ற எண் கொண்ட டவுன் பஸ், கே.ஆர். தோப்பூர் வழியாக ஓமலூர் வரை சென்று வந்தது. கொரோனா காரணமாக அந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் ஒரு வருட காலமாக அந்த பஸ் வருவதில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோதி வேல், மேட்டுக்காடு, சேலம்.

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் இருந்து நாமக்கல்லுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பஸ் இன்று வரை இயக்கப்படவில்லை. ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, பெரிய மணலி, வேலகவுண்டம்பட்டி, நாமக்கல் வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ் மீண்டும் இயக்கினால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-செ.பாலமுருகன், மல்லசமுத்திரம், நாமக்கல்.
====
எரியாத உயர் கோபுர மின்விளக்கு
சேலம் காடையாம்பட்டி, முள்ளிச்செட்டிப்பட்டியில் உயர் கோபுர மின்விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி உயர்மின்கோபுர விளக்கை எரிய் செய்ய வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், முள்ளிச்செட்டிப்பட்டி, சேலம்.

பெயர்ந்து தொங்கும் பெயர் பலகை 
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா அளவில் தலைமை நூலகமாக உள்ளது. அங்குள்ள நூலகத்தை குறிக்கும் அதனுடைய பெயர் பலகை சேதமடைந்து துருப்பிடித்து சுவரில் இருந்து பெயர்ந்து தொங்கி கொண்டிருக்கிறது. நீண்டகாலமாக இதே நிலையில் தான் உள்ளது. எனவே அதிகாரிகள் அதை மாற்றி புதிய பெயர் பலகை வைக்க மாவட்ட நூலக தலைமை அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பாலக்கோடு.
===
அடிப்படை வசதிகள் வேண்டும்
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா செல்லிபாளையம், அருந்ததியர் வடக்கு வீதியில் சுமார் 30 குடும்பங்கள் உள்ளன. அந்த பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், செல்லிப்பாளையம், நாமக்கல்.

சுத்தம் செய்யப்படாத கழிப்பிடம்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி எருமசமுத்திரம் கிராமத்தில் பொது சுகாதார கழிப்பிடம் உள்ளது. அந்த கழிப்பிடத்தில் இருந்து கழிவு நீர் கசிந்து வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்ய அதிகாரிகளில் விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர் பொதுமக்கள், எருமசமுத்திரம், சேலம்.

மேலும் செய்திகள்