மழை குறைந்ததால் இயல்புநிலை திரும்புகிறது
மழை குறைந்ததால் இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது.
அரியலூர்:
தொடர் மழை
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் ஆற்றங்கரைகளையொட்டி தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இயல்பு வாழ்க்கை
இந்நிலையில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது. அரியலூரில் கடந்த பல நாட்களாக வானில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டநிலையில், நேற்று கருமேகங்கள் விலகி நீலவானம் தெரிந்ததோடு, வெயில் அடிக்கத்தொடங்கியது. இதனால் வீடுகளில் ஈரமாக இருந்த துணிகள், தானியங்கள் போன்றவற்றை பெண்கள் காய வைத்தனர்.
பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் குடைகள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் சென்றனர். விவசாயிகள், கட்டுமான தொழிலாளர்கள் அதிக அளவில் வேலைக்கு சென்றனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பத்தொடங்கியுள்ளது. மேலும் அரியலூர் பகுதியில் மாலை நேரத்தில் மேலைவானில் சூரியன் பொன்நிறத்தில் மறைவதை ஒரு மாதத்திற்கு பிறகு பார்க்க முடிந்தது.