ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2021-11-30 19:05 GMT
திருவாரூர்:
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையின் காரணமாக 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கையை அனுப்பி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தங்கள் இருக்கையில் எழுந்து நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதுவரை மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் பயிர் காப்பீடு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். 
விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கை குறித்து பேசினர்.
இதையடுத்து கலெக்டர் கூறியதாவது:-
571 டன் விதை நெல் இருப்பு
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நவம்பர்-2021 மாத இயல்பான மழையளவு 253.40 மி.மீ. ஆகும். ஆனால் இந்த ஆண்டு கடந்த 29-ந் தேதி வரை 679.98 மி.மீ மழை பெய்துள்ளது. குறுவை சாகுபடியில் மழையினால் பாதிப்படைந்த 1,635 எக்டேர் பரப்பு கணக்கிடப்பட்டு மாநில பேரிடர் நிவாரண நிதி வழங்கிட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 93,123 எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், 54,944 எக்டேர் பரப்பளவில் தாளடி சாகுபடியும் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 67 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் வடகிழக்கு பருவமழையினால் 16,457 எக்டேர் நெற்பயிர் நீரினால் சூழப்பட்டு பாதிப்படைந்துள்ளது. பாதிப்படைந்த நெற்பயிருக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.6,038 மதிப்புடைய நிவாரண இடுபொருட்கள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. வேளாண்மைத்துறை மூலம் இதுவரை சம்பா, தாளடி சாகுபடிக்கு 1196.4 டன் விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 571 டன் தேவையான விதை நெல் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டு தொகை
மேலும் தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தனியார் கிடங்கு, மொத்த உர விற்பனையாளர் என கையிருப்பில் வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 881 விவசாயிகளினால் 1 லட்சத்து 42 ஆயிரம் 230 எக்டேர் சம்பா, தாளடி நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது. இதில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 888 விவசாயிகளுக்கு ரூ.297 கோடியே 33 லட்சம் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 8 ஆயிரத்து 406 எக்டேர் பரப்பிற்கு 9 ஆயிரத்து 316 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் கூடுதல் பரப்பிற்கு காப்பீடு செய்ததால் இழப்பீட்டு தொகை மத்திய அரசிற்கு நிதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
மேலும் வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. தவறாக உள்ளீடு செய்த விவசாயிகளுக்கு அவர்களது ஆதார் இணைப்பில் உள்ள வங்கி கணக்கில் இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 67 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 163 எக்டேர் பரப்பளவில் விவசாயிகளினால் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பிற்கு கூடுதலாக பதிவு செய்த விவசாயிகளின் விண்ணப்பங்கள் மற்றும் ஒருமுறைக்கு மேல் பதிவு செய்தவர்களின் விண்ணப்பங்களை கண்டறிந்து சரி செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 5 விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினர்.

மேலும் செய்திகள்