நெல் பயிர் சேதத்துக்கு பயிர்காப்பீடு பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை

மழையால் ஏற்பட்ட நெல் பயிர் சேதத்துக்கு பயிர்காப்பீடு பெற்றுத்தர வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2021-11-30 18:54 GMT
ராணிப்பேட்டை

மழையால் ஏற்பட்ட நெல் பயிர் சேதத்துக்கு பயிர்காப்பீடு பெற்றுத்தர வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 97 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 
பருவ மழையினால் பாதிப்படைந்த வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை பயிர்களுக்கு இழப்பீடு, பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீடு, ஏரி கால்வாய்கள் தூர்வாரி சீரமைப்பது, பாலாறு, பொன்னை ஆற்றில் தடுப்பணைகள் கட்டி நீரை சேமித்தல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பது குறித்தும், பொதுப் பிரச்சினைகள் குறித்தும் விவசாயிகள் தங்களது மனுவில் தெரிவித்து இருந்தனர்.

குடைமிளகாய் கொள்முதல் நிலையம்

தக்கோலத்தில் நெல் கொள்முதல் நிலையம் உடனடியாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் விவசாய நிலங்கள் சரிபார்க்கப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் சேர்க்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என வேளாண்மை அலுவலர் பதிலளித்தார்.
அதேபோல், ஐரோப்பிய வெள்ளரி மற்றும் குடைமிளகாய் சாகுபடி கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கைக்கு, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் விற்பனை துறை மூலம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளிக்கப்பட்டது.

கலவை நாகவல்லி கிராமத்தில் நெல் பயிர் சேதத்திற்கான காப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். காப்பீட்டு நிறுவனத்துடன் கலந்து ஆலோசிக்கப்படும், மேலும் பயிர் சேதாரங்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் பதிலளித்தனர்.

திமிரி ஒன்றியத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஐந்து தவணைகள் பெறப்பட்டுள்ளது மேற்கொண்டு தரப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்த புகாருக்குஉடன் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

மேலும் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

வெளிநடப்பு

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மாவட்ட  கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் லதா மகேஷ் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்திற்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததாக கூறி விவசாயிகளில் ஒரு சிலர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்