வேலூர் மாநகராட்சியில் அனைத்து தெருக்களும் சேறும் சகதியுமாக இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 70 சதவீதம் முடிவடையாமல் உள்ளதாகவும், அனைத்து தெருக்களும் சேறும், சகதியுமாக இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Update: 2021-11-30 18:54 GMT
வேலூர்

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 70 சதவீதம் முடிவடையாமல் உள்ளதாகவும், அனைத்து தெருக்களும் சேறும், சகதியுமாக இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

70 சதவீதம் முடியாமல் உள்ளது

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தற்போது எந்த நிலையில் உள்ளது. அதனை விரைந்து முடிக்க வேண்டியது குறித்து ஆலோசனைகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து இருக்க வேண்டும். ஆனால் தற்போது 70 சதவீத பணிகள் முடிவடையாமல் உள்ளது. ஒப்பந்ததாரர்கள் சரியாக வேலை செய்யாததால் பணிகள் முடியாமல் உள்ளது. ஒப்பந்தம் எடுத்த பெரிய நிறுவனங்கள், வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளனர். இதனால் வேலூர் மாநகராட்சியில் அனைத்து தெருக்களும் சேறும், சகதியுமாக உள்ளது.

இணைந்து பணியாற்ற அறிவுரை

முதலில் குழியைத் தோண்டுவது பின்னர் ரோடு போடுவது, பின்னர் மீண்டும் தோண்டுவது என ஏனோ, தானோ என்று பணிகள் நடந்துள்ளது.

குடிநீர் வடிகால் வாரியமும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொள்பவர்களும் இணைந்து பணி மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) பணிகளை முடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். வருகிற 12-ந் தேதி மாநகராட்சி பகுதியில் வீதி, வீதியாக சென்று ஆய்வு செய்ய உள்ளோம்.

முல்லைப் பெரியாறு

 முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முடியாது எனக் கூறினார்கள். ஆனால் நாங்கள் 142 அடி தண்ணீரை நிரப்பி காட்டியுள்ளோம். 
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, புதிய கமிஷனர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்