மினி பஸ் மோதி போட்டோகிராபர் சாவு

ஈரோட்டில் மினி பஸ் மோதி போட்டோகிராபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-30 17:37 GMT
ஈரோடு ,

ஈரோடு முனிசிபல்காலனியை சேர்ந்தவர் மதிவாணன். இவருடைய மகன் கரண்குமார் (வயது 23). இவர் தனியார் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக பணியாற்றி வந்தார்.

நேற்று மாலை ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நாச்சியப்பா வீதி வழியாக சவிதா சிக்னல் நோக்கி கரண்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர் சவிதா சிக்னலுக்கு அருகில் பாரதிவீதியில் சென்றபோது பின்னால் வந்து கொண்டு இருந்த மினி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் கீழே விழுந்த கரண்குமார் மீது மினி பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கரண்குமார் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் இறந்த கரண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், பழனி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் அந்த வழியாக செல்கிறது. விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஈரோடு பஸ் நிலையம் வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மேலும் செய்திகள்