சீர்காழி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் தாசில்தார் அலுவலகத்தில் குடும்பத்துடன் மீனவர் தஞ்சம்

சீர்காழி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் தாசில்தார் அலுவலகத்தில் குடும்பத்துடன் மீனவர் தஞ்சம் அடைந்தார்.

Update: 2021-11-30 17:27 GMT
சீர்காழி:
சீர்காழி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் தாசில்தார் அலுவலகத்தில் குடும்பத்துடன் மீனவர் தஞ்சம் அடைந்தார்.
மீனவர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட தொடுவாய் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 33). மீனவர். இவருடைய மனைவி கிரிஜா(30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.  
முருகேசன் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வருகிறார். தன்னை வயலில் சாகுபடி செய்யவிடாமல் தனது உறவினர்கள் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், நிலத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக சீர்காழி போலீசில் முருகேசன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 
ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி தொடுவாய் கிராம பஞ்சாயத்தார்கள் ஒன்றுகூடி முருகேசன் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக தீர்மானம் போட்டு முருகேசன் குடும்பத்துடன் பேசக்கூடாது, கடைகளில் பொருட்கள் கொடுக்க கூடாது, தண்ணீர் பிடிக்கக்கூடாது, என தண்டோரா மூலம் அறிவிப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. 
இதனால் மன உளைச்சல் அடைந்த முருகேசன் மீன்பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக மயிலாடுதுறை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோரிடம் முருகேசன் புகார் மனு அளித்துள்ளார்.
தாசில்தார் அலுவலகத்தில் தஞ்சம்
இந்த நிலையில் முருகேசன் தனது தந்தை மணி, தாய் வசந்தா, மனைவி கிரிஜா, மகள்கள் ஆகியோருடன் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் சண்முகம், இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முருகேசன் குடும்பத்தினர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து தங்கள் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்