‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
மயான பாதை சீரமைப்பு
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பலக்கனூத்து ஊராட்சி புது எட்டமநாயக்கன்பட்டியில் மயானமும், மயானத்துக்கு செல்லும் பாதையும் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் பாதை முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதால் மழைக்காலத்தில் சகதிக்காடாக மாறிவிடுகிறது. எனவே மயானத்துக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்.
-கணபதி, புது எட்டமநாயக்கன்பட்டி.
அடிப்படை வசதிகள் தேவை
திண்டுக்கல் ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சி சாலையூரில் ஆதிதிராவிடர் காலனியில் சாக்கடை கால்வாய், சிமெண்டு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மழைக்காலத்தில் கழிவுநீருடன், மழைநீர் சேர்ந்து தெருவில் செல்கிறது. இதனால் சுகாதாரக்கேடு உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
-குமரேசன், சீலப்பாடி.
சீமை கருவேல மரங்களால் விபத்து
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவை அடுத்துள்ள காப்பிளியபட்டி காலனியில் 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை மறைக்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் சில நேரம் விபத்து நடக்கிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை, முட்கள் பதம் பார்த்து விடுகின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
-மகுடீஸ்வரன், காப்பிளியபட்டி.
குண்டும், குழியுமான சாலை
நத்தம் மீனாட்சிபுரத்தில் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மேலும் சாலையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, மீனாட்சிபுரம்.
மழைநீர் வடிகால் வசதி
தேனி மாவட்டம் மல்லையகவுண்டன்பட்டியில் மழைநீர் வடிகால் வசதி முறையாக இல்லை. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. மேலும் கண்மாய் தண்ணீரும் ஊருக்குள் புகுந்து விடுகிறது. வீடுகளை சூழ்ந்து தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உருவாகி தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வடிகால் வசதி செய்வதோடு, கண்மாய் தண்ணீர் ஊருக்குள் வராமல் தடுக்க வேண்டும்.
-சந்தோஷ்குமார், தேனி.