பாலியல் வன்கொடுமையை கண்டித்து பெண்கள் இணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்கொடுமையை கண்டித்து பெண்கள் இணைப்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரியகுளம்:
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் அகில உலக பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பெரியகுளத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியகுளம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெண்கள் இணைப்புக்குழு மாநில செயற்குழு உறுப்பினர் சித்ராதேவி தலைமை தாங்கினார்.
இதில் சர்வோதீப் பெண்கள் எழுச்சி கூட்டமைப்பின் இயக்குனர் சகாய சங்கீதா, பெரியகுளம் நகர்நல சங்க செயலாளர் அன்புக்கரசன், பெண்கள் இணைப்புக்குழுவை சேர்ந்த பத்மாவதி, மல்லிகா உள்பட ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.