கடலூரில் தொடரும் துயரம் மழை ஓய்ந்தும் வடியாத வெள்ளம் மக்கள் பரிதவிப்பு
கடலூரில் மழை ஓய்ந்தும் ஓயாத துயரமாக குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வடியாததால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.
கடலூர்,
இடைவிடாது கொட்டிய மழை
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே கடந்த 26 -ந் தேதி முதல் நேற்று முன்தினம் அதிகாலை வரை கடலூரில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து, எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளித்தது. இதையடுத்து மழை ஓய்ந்து, அவ்வப்போது வெயில் தலைகாட்டுகிறது. நேற்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மழை ஓய்ந்தும் ஓயாத துயரமாய் வெள்ள நீர் மட்டும் இன்னும் வடிந்தபாடில்லை.
கடலூரில் பெரப்பன்குட்டை, ஆனைக்குப்பம், சுப்புராயலுநகர், புருஷோத்தமன் நகர், கோண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைவெள்ளம் இன்னும் வடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணியும், மந்தகதியில் நடக்கிறது.
படகில் உணவு
இதனால் வடியாத வெள்ளத்தால் சிலர் வீடுகளின் உள்ளேயே முடங்கியுள்ளனர். வீடுகளில் முடங்கியவர்களுக்கு, தன்னார்வலர்கள் நேற்று பிஸ்கட், ரொட்டி, சாப்பாடு உள்ளிட்டவற்றை படகில் சென்று வீடு, வீடாக வழங்கினார்கள். மேலும் மழை வெள்ளத்தால் குடியிருப்பு வளாகத்தின் தரை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மழை நீர் புகுந்ததால் சேதமடைந்து அப்படியே கிடக்கின்றன.
கடலூர் நகரில் கோண்டூர் உள்ளிட்ட சில இடங்களில் டீசல் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் வெள்ளம் வடிகிறது. மேலும் கனமழை கொட்டித்தீர்த்தபோது வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கே திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களும் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில இடங்களில் மழை நீர் வடியாமல் தேங்கிக்கிடக்கிறது.
மீன்பிடிக்க செல்லவில்லை
மேலும் தொடர் மழையால் கடலூர் புருகீஸ்பேட்டையில் உள்ள கொண்டங்கி ஏரி நேற்று நிரம்பி வழிந்தது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் கொண்டங்கி ஏரிக்கு சென்று, அங்கு நிரம்பி வழிந்த நீரில் ஆர்வமாக மீன்பிடித்தனர். இதுதவிர கடலூர் மாவட்ட மீனவர்கள் நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடலூர் துறைமுக பகுதியில் ஓய்வெடுத்ததை காண முடிந்தது.
வீராணம்
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ள 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.55 அடியை எட்டியது. தொடர்ந்து ஏரிக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியில் இருந்து உருத்திர சோலை ஜீரோ பாயிண்ட் வழியாக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீரும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு மூலம் வினாடிக்கு 1,700 கன அடியும், வெள்ளியங்கால் மதகு வழியாக வினாடிக்கு 1,100 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 63 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.