எருமப்பட்டி, டிச.1-
ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10 ஒன்றிய கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள்
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒன்றியக்குழு தேர்தல் நடப்பதாக இருந்தது. திடீரென தேதி குறிப்பிடப்படாமல் தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நோட்டீசு ஒட்டப்பட்டது. இதனால் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையே தேர்தல் தள்ளிவைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வை சேர்ந்த 8 பேர், பா.ஜனதா, சுயேச்சை தலா ஒருவர் என 10 கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பு
அப்போது தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு விளக்கம் கேட்டு கோஷங்கள் எழுப்பினர். அப்போது மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்து விளக்கத்தை பெற்றுக் கொள்ளமாறு அதிகாரிகளும், போலீசாரும் கூறினர். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே போராட்டம் நடத்திய 10 கவுன்சிலர்களும் நேற்று மாலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷிடம் கொடுத்த மனுவில், எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான காரணத்தை எழுத்து பூர்வமாக தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.