தேனி மாவட்டத்தில் கனமழையால் 17 வீடுகள் இடிந்து சேதம்
தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 17 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
தேனி:
தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 17 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
கனமழை
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் இரவில் சாரல் மழை பெய்தது. நள்ளிரவில் கனமழையாக உருவெடுத்தது. காலை 7 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக வீரபாண்டியில் 119 மி.மீ. மழை பெய்தது. அதுபோல், ஆண்டிப்பட்டியில் 25.6 மி.மீ., அரண்மனைப்புதூரில் 39.4 மி.மீ., போடியில் 32.4 மி.மீ., கூடலூரில் 56.5 மி.மீ., மஞ்சளாறு அணையில் 10 மி.மீ., பெரியகுளத்தில் 30 மி.மீ., சோத்துப்பாறையில் 15 மி.மீ., உத்தமபாளையத்தில் 63 மி.மீ., வைகை அணையில் 25 மி.மீ. மழை அளவு பதிவானது.
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டன. தொடர்ந்து பகலில் தேனி உள்பட பல இடங்களிலும் வெயில் அடித்தது. மாலையில் தேனி, போடி, உத்தமபாளையம் உள்பட பல இடங்களில் சாரல் மழை பெய்தது. மாலை 5 மணியளவில் மாவட்டத்தின் சில இடங்களில் பலத்த மழை பெய்தது.
17 வீடுகள் சேதம்
நேற்று பெய்த பலத்த மழையால் தேனி சுண்ணாம்பு காளவாசல் தெருவில் வீருசின்னு (வயது 67) என்பவர் வசித்து வந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த வீருசின்னுவின் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.
இதேபோல் ஆண்டிப்பட்டி பகுதியில் 6 வீடுகள், பெரியகுளம் பகுதியில் 2 வீடுகள், உத்தமபாளையம் பகுதியில் 4 வீடுகள், போடி பகுதியில் 4 வீடுகள் என மொத்தம் 17 வீடுகள் சேதம் அடைந்தன. சேதம் அடைந்த பகுதிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று சேதம் விவரங்களை பார்வையிட்டனர்.
கட்டுப்பாட்டு அறை
மாவட்டத்தில் மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தொடர்ந்து பெய்து வரும் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம். கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகள், தகவல்களை பெறுவதற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04546-261093 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தங்கள் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் கொடுக்கலாம்.மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் கனமழையின் காரணமாக இதுவரை 205 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணமும், காயம் அடைந்த 2 பேருக்கு ரூ.17 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளை பொறுத்தவரை மாவட்டத்தில் 623 குளங்கள் உள்ளன. இதில் 62 குளங்கள் நிரம்பியுள்ளன. 39 குளங்களில் 75 சதவீதமும், 87 குளங்களில் 50 சதவீதமும், 112 குளங்களில் 25 சதவீதமும் நீர் நிரம்பி உள்ளது. 323 குளங்களில் 25 சதவீதத்துக்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.