துணை ராணுவ படை வீரரின் தந்தை படுகொலை

சாணார்பட்டி அருகே, துணை ராணுவ படை வீரரின் தந்தை படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2021-11-30 16:41 GMT
கோபால்பட்டி:

துப்புரவு தொழிலாளி  

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த கோபால்பட்டி அருகே உள்ள கே.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது 63). இவர், கணவாய்பட்டி ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

 அவருடைய மனைவி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
பெரியதம்பிக்கு சாந்தி (45) என்ற மகளும், ராஜா (41), முருகவேல் (37) என்ற மகன்களும் உள்ளனர். சாந்திக்கு திருமணமாகி சிவகங்கையில் வசித்து வருகிறார். 

சென்னை சி.ஆர்.பி.எப். (துணை ராணுவம்) பிரிவில் ராஜா பணிபுரிகிறார். வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் முருகவேல் பணிபுரிந்து வருகிறார்.

மனைவி இறந்ததாலும், மகள், மகன்கள் வெளியூர்களில் வசிப்பதாலும் பெரியதம்பி மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

 கட்டிலில் பிணம்

இந்தநிலையில் நேற்று காலை பெரியதம்பி, நீண்டநேரமாக வீட்டை விட்டு ெவளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். 

அப்போது பெரியதம்பி, கட்டிலில் படுத்திருந்த நிலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

யாரோ மர்ம நபர்கள், பெரியதம்பியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சாணார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் சம்பவ இடத்துக்கு மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது, வீட்டில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி சென்றது. ஆனால் யாரையும் மோப்பநாய் கவ்வி பிடிக்கவில்லை. 

இதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். 

 கல்லால் தாக்கி கொலை

இதற்கிடையே பெரியதம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெரியதம்பியின் முகத்தை கல்லால் தாக்கி மர்ம நபர்கள் படுகொலை செய்தது தெரியவந்தது. அவரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்