விற்பனைக்கு வந்த 86 கிலோ ராட்சத மீன்
விற்பனைக்கு வந்த 86 கிலோ ராட்சத மீன்
கோவை
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கபீர். இவர் ஒலம்பஸ் அருகே மீன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மங்களாபுரம் பகுதியில் உள்ள கடலில் பிடிபட்ட 86 கிலோ எடை கொண்ட எல்லோ பின்டியூனா என்ற ராட்சத மீன் நேற்று காலை கோவை ராமநாதபுரத்தில் உள்ள மீன் கடைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
அக்கடையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த மீனை, அந்த பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், கோவையில் உள்ள எங்கள் கடைக்கு இதற்கு முன்பு 56 கிலோ எடை கொண்ட ராட்சத மீன் விற்பனைக்கு வந்தது.
அதன் பிறகு தற்போது முதல் முறையாக 86 கிலோ எடை கொண்ட ராட்சத மீனை ஏலத்தில் எடுத்து விற்பனைக்காக கொண்டு வந்து உள்ளோம். அந்த மீனை சுத்தப்படுத்திய பின்னர் கழிவுகள் நீங்க 50 கிலோ இருக்கும். ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீன் ஓட்டல்களுக்கு விற்பனை செய்யப்படும் என்றார்.