மஞ்சூரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது
மஞ்சூரில் ஆடுகளை திருடிய 2 வாலிபர்கள் கைது
ஊட்டி
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் தங்களது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்த்து வருகின்றனர். சமீபத்தில் கீழ்குந்தா, மஞ்சூர் பஜார், ஒணிக்கண்டி, பிக்கட்டி, எடக்காடு உள்ளிட்ட இடங்களில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திருட்டு போனதாக அதன் உரிமையாளர்கள் மஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் ஊட்டி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சூர்யா மேற்பார்வையில் மஞ்சூர் போலீசார் ஆடு திருடர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று போலீசார் மஞ்சூரில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மஞ்சூர் சிவசக்தி நகரை சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 21), வினோத் (19) ஆகிய 2 பேர் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 5 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் ஆடு திருடிய 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.