குன்னூர்-ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு
குன்னூர்-ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு
ஊட்டி
குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டும், மரங்கள் விழுந்தும் வருகின்றன. தொடர் மழையால் ரெயில் தண்டவாளத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டதால், மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி-குன்னூர் இடையே மட்டும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று குன்னூர் வெலிங்டன்-அருவங்காடு இடையே உள்ள மலை ரெயில் தண்டவாளத்தில் விளைநிலத்தில் இருந்து மண்சரிவு ஏற்பட்டது.
தண்டவாளத்தில் மண் மற்றும் மரக்கிளைகளும் விழுந்தன. ரெயில் பாதையில் மேலும் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து 30 பேர் கொண்ட ரெயில்வே குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டது.
குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருவங்காடு அருகே சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. ஊட்டி கூட்ஷெட் சாலையில் விழுந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.