விளாத்திகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால், 1,600 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விளாத்திகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால், 1600 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

Update: 2021-11-30 14:16 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால், 1,600 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பலத்த மழை
விளாத்திகுளம் பகுதியில் கடந்த ஒரு வாரகாலத்திற்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பல இடங்களில் குறிப்பாக எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர், மேலக்கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர் பலத்த மழையின் காரணமாக விளாத்திகுளம் பகுதிகளில் பல்வேறு கண்மாய்கள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. பல இடங்களில் நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யபட்ட காரணத்தினால் கண்மாயில் இருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் நிலங்களில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீரில் பயிர்கள் மூழ்கின
எட்டயபுரம் அருகே உள்ள கீழ்நாட்டுகுறிச்சி கிராமத்தில் கண்மாய் நீர் வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் கீழ்நாட்டுகுறிச்சி, மாசார்பட்டி, அயன்ராசாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, பாசி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளன.
மேலும் விளாத்திகுளம் அருகே என்.ஜெகவீரபும், மாவிலோடை, கழுகசாலபுரம், பொத்தகூடும்பட்டி, சங்கரநாயக்கன்பட்டி, கந்தசாமிபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,100-க்கு பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வெங்காயம், உளுந்து, பாசி, மிளகாய் உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. பல இடங்களில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பது மட்டுமின்றி விவசாயிகள் நிலங்களுக்குள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் வேதனை
இந்தாண்டு 3 முறை விதைப்பு செய்து 2 முறை மழை இல்லாமலும் தற்போது அதிக மழை பெய்தும் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தூத்துக்குடி மாவட்டத்தினை பேரிடர் மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். இல்லை என்றால் அடுத்தாண்டு விவசாயம் செய்யக்கூடிய நிலபரப்பு குறையும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்லகநத்தம் - விருதுநகர் மாவட்டம் எல்லையில் சிந்தவம்பட்டி கிராமத்திற்கு இடையே உள்ள வைப்பாற்றில் மழை நீர் சென்று வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்