தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வீடுகளுக்குள் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள மின்சார மோட்டார்களை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வீடுகளுக்குள் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள மின்சார மோட்டார்களை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வீடுகளுக்குள் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற பொதுமக்களுக்கு இலவசமாக மின்சார மோட்டார் வழங்கப்படுகிறது. இதை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
கனமழை
தூத்துக்குடி மாநகரில் கடந்த 25-ந் தேதி பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இன்னும் பல வீடுகளுக்குள்ளும் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகர பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றுவதற்காக ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 370 மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போன்று டேங்கர் லாரிகள் மூலமும் தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் சில பகுதிகளில் மழைநீர் வடியத் தொடங்கி உள்ளது.
மின்மோட்டார்
அதே நேரத்தில் வீடுகளை சூழ்ந்து உள்ள மழைநீரை மக்கள் மோட்டார்கள் மூலம் அகற்றி வருகின்றனர். அதே நேரத்தில் மோட்டார் இல்லாமல் சிரமப்படும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி மூலம் மோட்டார்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 50 ஒரு எச்.பி மோட்டார்களும், 10 அதிக திறன் கொண்ட மோட்டார்களும் கோவையில் இருந்து வாங்கப்பட்டு உள்ளன. இந்த மோட்டார்கள் அனைத்தும் நேற்று தூத்துக்குடி மாநகராட்சிக்கு வந்தடைந்தன.
அமைச்சர் ஆய்வு
இந்த மோட்டார்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த அதிதிறன் கொண்ட மோட்டார்கள் ரகுமத்நகர், முத்தம்மாள் காலனி பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு எச்.பி திறன் கொண்ட மோட்டார்களை பொதுமக்கள் வீடுகளில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்காக மக்களுக்கு மாநகராட்சி மூலம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மாநகராட்சியை அணுகி தங்கள் வீடுகளில் மழைநீரை அகற்றுவதற்கு மோட்டாரை பெற்றுக் கொள்ளலாம். அந்த மோட்டார் மற்றும் குழாயுடன் சேர்த்து பெற்றுக் கொண்டு மழைநீரை எளிதில் அகற்றலாம். மழைநீரை வெளியேற்றிய பிறகு மீண்டும் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் மழைநீர் தேங்கி இருப்பதால் குடிநீர் மூலம் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடுகள் தோறும் குளோரின் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மாநகரில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் பிளீச்சிங் பவுடரும் போடப்பட்டு வருகிறது.