லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை இளநிலை உதவியாளர் கைது
வரதட்சணை கொடுமை தொடர்பான புகாரில் சாதகமாக அறிக்கை அனுப்புவதற்காக ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சீபுரம் சமூக நலத்துறை அலுவலக இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.;
ரூ.1 லட்சம் லஞ்சம்
சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அர்ச்சனா. இவர், கணவர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு காஞ்சீபுரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அந்த புகாரை போலீசார் அனுப்பி இருந்தனர். புகாரை விசாரித்து கிருஷ்ணபிரசாத்துக்கு சாதகமாகவும், ஒரு தலைபட்சமாகவும் தனது அறிக்கையை போலீஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க காஞ்சீபுரம் சமூக நலத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் பிரேமா ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
கைது
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணபிரசாத், இதுபற்றி காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்தை தருவதாக கிருஷ்ணபிரசாத்தும் சம்மதித்து பிரேமாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரேமாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.25 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.