கோவில்பட்டியில் பழுதடைந்த இலுப்பையூரணி சாலையை புதுப்பிக்க கோரி, அந்த சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவில்பட்டியில் பழுதடைந்த இலுப்பையூரணி சாலையை புதுப்பிக்க கோரி, அந்த சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பழுதடைந்த இலுப்பையூரணி சாலையை புதுப்பிக்க கோரி, அந்த சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டும் குழியுமான சாலை
கோவில்பட்டி புதுகிராமம் இலுப்பையூரணி சாலை மழையினால் சேதமடைந்து குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையிலுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குட்டை போல காட்சியளிக்கிறது.
இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
பெண்கள் போராட்டம்
இந்த சாலையை பஞ்சாயத்து யூனியன் நிர்வாகம் புதுப்பிக்க கோரியும், இந்த சாலையிலுள்ள மயானத்தில் மோட்டார் மற்றும் குழாயை பழுது பார்க்க கோரியும் நேற்று நேதாஜி விவேகானந்தா சேவா சங்க தலைவர் நாகராஜன் தலைமையில் பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மாற்று திறனாளிகள், விவசாயிகள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் பரபரப்பு காணப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதை அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி, மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த சாலையை புதுப்பித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை முடித்து கொண்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.