காட்டுப்பள்ளி அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்கள் மீட்பு - போலீசார் விசாரணை
காட்டுப்பள்ளி அருகே கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
மீஞ்சூர்,
இலங்கை மீனவர்கள் கடந்த 26-ந் தேதி அந்தமான் அருகே படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகு பழுதானதாக கூறப்படுகிறது.
அந்த படகில் இலங்கை நாட்டின் வலைசனை பகுதியை சேர்ந்த முகமதுஹனிபா (வயது 50), பதூர்தீன் முகமது ரிஸ்கான் (21), அன்சார் முகமது ரியால் (19), பலைநகர் தியவாட்டம் பகுதியை சேர்ந்த ஹயத்தா முகமது ஹைதர் (42) ஆகியோர் இருந்தனர். படகு பழுதான நிலையில் செய்வதறியாது அவர்கள் திகைத்ததாக கூறப்படுகிறது.
இந்த படகு கடல் அலையால் காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்தின் அருகே 18 நாட்டிக்கல் மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது காசிமேடு மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த படகை பார்த்தவுடன் சென்னை காசிமேடு கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த கடலோர காவல் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடலில் தத்தளித்த 4 மீனவர்களை மீட்டனர். பின்னர் தமிழக கியூ பிராஞ்ச் போலீசாருக்கும், காட்டூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து பிரிவு போலீசார் அவர்களை விசாரித்து வருகின்றனர்.