பாளையங்கோட்டையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் பஸ் நிலைய கடைகளுக்கு கூடுதல் வாடகை விதிக்க எதிர்ப்பு
வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
நெல்லை:
பாளையங்கோட்டை பஸ் நிலைய கடைகளுக்கு கூடுதல் வாடகை விதிக்க எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம்
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், பாளையங்கோட்டை பஸ் நிலைய கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்குள்ள கடைகள் (வாடகைக்கு) ஏலம் விடப்பட்டது. அப்போது பழைய வியாபாரிகளுக்கே கடைகளை மீண்டும் வாடகைக்கு விட வேண்டும். முன்வைப்புத்தொகை, வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வியாபாரிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் நேற்று பாளையங்கோட்டை பஸ் நிலைய கடைகள் மீண்டும் ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது.
கடையடைப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள தற்காலிக கடை வியாபாரிகள், மார்க்கெட் வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பாளையங்கோட்டை ராமசாமி கோவில் மைதானத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் பாளையங்கோட்டை பஸ் நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் அசோகன், செயலாளர் அமிர்தராஜ், பொருளாளர் ஷேக் முகம்மது உள்பட ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர்.