கூடங்குளம் அருகே இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயன்ற 3 பேர் கைது மினி லாரி பறிமுதல்

இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயன்ற 3 பேர் கைது

Update: 2021-11-29 22:23 GMT
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே, இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் கூத்தங்குளியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் மினி லாரியில் ஏராளமான மூட்டைகளில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலை இருந்ததும், அவற்றை கடல் வழியாக இலங்கைக்கு முறைகேடாக கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து பீடி இலை மூட்டைகளுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
இதுதொடர்பாக மினி லாரியில் இருந்த கூடங்குளம் அருகே மாடம்பிள்ளைதர்மம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் துளசிமணி (வயது 34), புதுமனையைச் சேர்ந்த டேவிட் மகன் பிரித்திவி ராஜ் (23), அழகேசன் மகன் சதீஷ்குமார் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான கூத்தங்குளியைச் சேர்ந்த டைசன், அஜித், தினேஷ் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்